நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

29 April 2011

ஆறாவது படிக்கும் பாபு என் அண்ணன்தாம்பா!!!


"அம்மா! அம்மா!" 
"என்னடா செல்லம்?" 
"அம்மா.. பக்கத்து வீட்டுல ஆறாவது படிக்கற பாபுவா நான் காதலிக்கிறேன்மா.." 
அம்மா சிரிக்கிறாள். "அம்முக்குட்டி! நீ சின்ன பொண்ணு.. பாபு உன்னைய விட எவ்ளோ பெரிய பையன்.. அவன் உனக்கு அண்ணன்டா. இப்படியெல்லாம் பேசக்கூடாது.. சமர்த்து பொண்ணு இல்ல நீ.. ஓடு ஓடு..போய் வீடியோகேம்ஸ் விளையாடு.."

"அம்மா.. நான் நிஜமா அவன காதலிக்கிறேன்மா" 
"உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாது? பைத்தியம் மாதிரி உளறாம போய் விளையாடு.. அப்பாவுக்கு நீ இப்படி பேசறது தெரிஞ்சா அடிதான் விழும், புரியுதா? பேசாம போ, போய் விளையாடு!"

அம்மாவிடம் கோவம் எட்டி பார்க்க.. 
"ஏம்மா! . அவனை நான் காதலிச்சா என்ன தப்பு? அம்முகுட்டி கேட்க..
"அவன் உன்னயவிட பெரிய பையன், நீ இப்படி எல்லாம் பேசக்கூடாது.."
"அப்பா கூட தான் உன்னைய விட பெரியவரு.. நீ அவர காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கல? அப்போ நான் ஏன் பண்ணிக்க கூடாது?!"

"என்னாங்க.. உங்க பொண்ணு பேசற பேச்ச பார்த்தீங்களா?!" 
ஒன்னாம் வகுப்பு தமிழ்பாடப்புத்தகத்துல வரமாதிரி அம்மா சமையல்ரூம்ல இருந்து அலற, 
அப்பா நியூஸ்பேப்பர் படிக்கறத நிறுத்திட்டு, ஈசிசேர்ல இருந்து எட்டி பாக்கறாரு..

அப்பா அமைதியா என்னை பார்த்து "செல்லம்! இங்க வாடா..!"
"என்னப்பா?" அம்மாவும் நானும் கிட்டே போக..
அம்மாவை பார்த்து "என்னடி நீ.. குழந்தைகிட்ட புரியறமாதிரி எடுத்து சொல்லணும்.. அவ குழந்தை, நல்லது கெட்டது எதுன்னு நாம தான் புரியவைக்கணும்", "இப்படி வா.." அப்பா என்னை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு ஆரம்பித்தார்.. 

"நீ குட்டிபொண்ணு..இப்போ வர நிறைய சினிமா எல்லாம் பார்த்து தப்பு தப்பா யோசிச்சி வைச்சி இருக்க.. சினிமால வர குட்டி பசங்க காதல் எல்லாம் நிஜம் இல்லடா.. நீ புத்திசாலி, அப்பாவுக்கு தெரியும்!!!.. அதுக்கும் மேல, அவன் உன்னைய விட பெரிய பையன்.. உனக்கு அவன் அண்ணன்.. புரிஞ்சுதா? உனக்கு அவன் யாரு.. அண்ணன்.. அண்ணன்.. எங்க. சொல்லு பாக்கலாம்.. பாபு அண்ணா, பாபு அண்ணா.."

விக்கி விக்கி அழுதுகொண்டே நான் "பாபு அண்ணா" என்று சொன்னதும், அப்பா "வெரி குட்" என்று மலர்ச்சியுடன் பாராட்ட.. அம்மாவும் மகிழ்ந்து போகிறாள்.. என்னோட முதல் காதல் முடிந்து போனது.. நாலுவரி நோட்டுல இதை பத்தி ஒரு கவிதையாவது  எழுதணும். என் சோகம் என்னோட..!


28 April 2011

அடடா மழைடா!..


உன் குடையில் இடம் கொடேன் 
ஒரு ஓரமாகவாவது
நனைந்து விட்டு போகிறேன்...


முகம் மறைக்காதே குடை கொண்டு
நனைந்த நீ தெரிகிறாய்..


இடி இடிக்கையில் 
என்னை நினைத்துக்கொள்..
இன்னமும் பயமாக இருந்தால்..
என்னை அணைப்பதாய் நினைத்துக்கொள்!


மழையில் கலைந்த கோலத்தை 
வருத்தமாய் பார்க்கிறாய்
வார்த்தைகளில்லாமல் பார்க்கிறேன்
கண்ணில் மைகரைந்து நிற்கும் 
உன் அழகிய கோலத்தை..


ஏதாவது ஒரு மழைநாளில் 
என் வீடு வந்து போ
தேநீர் கோப்பையும் நானும்..
உன் அணைப்புக்காய் ஏங்கியபடி .. 



அம்மா திட்டுவாள் என்று 
அவசரமாய் ஓடாதே..
கண்ணீர் சிந்துவோம் 
இன்னும் அதிகமாய்
மழையும் நானும்.. 



27 April 2011

இங்கே மழை, அங்கே நீ..




அபூர்வமாக தான்
கோடையில் மழை..
எனக்கான உன் வருகையாய்

நீ தரும் சிறு முத்தம் போல
ஒரு துளி..
அவசரமாய் உதடு நனைத்து போகிறது.. 


ஊடுருவும் குளிரில்
கதகதப்பாய் உன் நினைவுகள்
என் நெஞ்சை அணைத்தபடி..  

ஆலங்கட்டி மழை
என் தலையில் கொட்டுதடி
அழகே!
நீ ஆத்திரத்தில் கொட்டுவதை போலவே..

தென்னை மரமும், நானும்
ஆடிக்கொண்டே இருக்கிறோம் 
அழுத்தமான உன் அணைப்பினிலே 

தும்மலும் இருமலும்
உன் நினைவால் மட்டும் தானடி..
மழையால் இல்லவே இல்லை.. 

வானவில் வந்து போகுதடி..
இன்றைக்கு வந்தது..
உன் துப்பட்டாவா? சேலையா?

உளுந்தரைத்த கையுடன்
நீ வந்து நிற்பதை போலவே
மேககூட்டம் நிற்குதடி வானத்திலே 

நீ சேரும் வேளையிலே
இயற்கை தொலைத்தது கொஞ்சம்தான் 
இதயம் தொலைத்தது நான் மட்டுமே 


உன் வருகையினால் சிலிர்த்தபடி
காற்றெல்லாம் காதலிலே  
பூக்களும் நானும் பூமியிலே

இடியும் மின்னலும்
உன்னை விடவா 
என்னை மிரட்டிவிட முடியும்?   

குடை பறக்க நிற்கிறேன்
உன்னை முழுதாய் உணர்ந்திடவே.. 

17 April 2011

உப்பரித்து போகட்டும் என் காதலை


வர சொன்னாய்
வந்தேன்..
காத்திருக்க சொன்னாய்
காத்திருக்கிறேன்
மௌனித்திருக்கிறாய்
மறுமொழிக்காய் முகம் பார்க்கிறேன் 
பின்னால் சுற்றாதே என்கிறாய்
எப்படியடி?!..

கண்ணியமற்று சேலை இழுக்கும்
காற்றை கூட நேசிக்கிறாய் 
காலை வாரும் 
அலையை பார்த்து சிரிக்கிறாய்
சுண்டல் விற்பவனிடம் 
சிநேகமாய் பேசுகிறாய் 
தூரத்து குழந்தைகளை
ரசித்து பார்க்கிறாய் 
காற்று நிரம்பிய பலூன்களை 
கையில் பிடித்திருக்கிறாய் 

கடற்கரை இலக்கணங்கள் 
எல்லாம் எல்லாம் கவனித்திருக்கிறாய்
இரண்டடி தள்ளி அமர்ந்திருக்கும் 
என்னை மட்டும் மறந்தபடி
எழுந்து போய்விடடி உடனே 
என்னையே ரசிக்கமுடியவில்லை என்னால்..
உப்பரித்து போகட்டும் என் காதலை!  


15 April 2011

ஈரமாய் அவள்...


நிறையப்பேர் நின்ற சுவடுகளும் 
அதிகமாய் நனைந்திருக்கும் கடற்கரையும் 
உணர்த்துகின்றன எனக்கு
அவள் சென்றது 
இந்தப்பக்கம் தான் என்று.. 

சிப்பி இருக்குது, முத்தும் இருக்குது...


விடுமுறையின் ஒரு நாளில் 
கடற்கரை மணலில்
முத்துக்களை விடுத்தது 
கிளிஞ்சல்களை பொறுக்கி கொண்டிருக்கிறேன்

அவள் காதலை தொலைத்தபின்
மீதமிருக்கும் என் நெஞ்சத்தை 
நினைவுபடுத்துவது போல
சில மட்டும் நொறுங்கியதாய்.. 


10 April 2011

தேடல்களை தொலைத்துவிட்டேன்..




சுற்றமும் நட்பும் சூழ 
ஒரு சுபயோக சுபதினத்தின் 
சுகமான  இரவில்  
உள்ளனுப்ப பட்டேன் தன்னந்தனியாய் 
முதல் அனுபவம் என்பதால் 
பதற்றமும் பாவமான முகமுமாய் நான் 

அம்மா என்று கதறியபடி 
வெளியே ஓடி வந்துவிடலாமா? 
மற்றவர்களுக்கும் இதே அனுபவங்கள் இருந்திருக்குமா?!
சொல்லமுடியா துக்கம் நெஞ்சை அடைக்கிறது
எப்படியோ சமாளித்தபடி ஏறிட்டு பார்த்தால்
இனிப்பை நீட்டுகிறாள் அவள்.. 

இப்போது இனிப்பா?
அப்படிப்பட்ட மனநிலையில் இல்லையடி நான்.. 
கதறுது என் மனம்..
இவளுக்கு இதெல்லாம் புரியாது..
எத்தனை பேரை இப்படி பார்த்திருப்பாள்?
தேற்றிக்கொள்கிறேன் என்னை நானே 

அப்படியே அசந்து உறங்கிவிட்டேன்..
மீண்டும் விழித்தபோது..
இரவா? பகலா?
ஒன்றும் விளங்கவில்லை..
ரொம்ப பசிக்கிறது 
எத்தனை வேலைகள் இன்று மட்டும்..  

முடிவில் இறங்கவேண்டிய இடம்..
இதுதானா?.. 
வித்தியாசமான மனிதர்கள்
வழிதெரியா பாலைவனத்தை விட
மொழிபுரியா தேசம் 
கொடுமையிலும் கொடுமை

ஆட்டோ ஒன்றையும் காணோம்
யாரோ நிற்கிறார்கள் 
என்பெயர் சுமந்த பலகையோடு
தப்பித்தாயடா மகனே இன்று நீ..!
போகும் வழியெல்லாம்.. 
எழுத்து கூட்டிப்படித்தாலும்
எதுவும் விளங்கவில்லை..

வாழ ஆரம்பித்துவிட்டேன்
அப்பப்பா..! எவ்வளவு கற்றுக்கொள்வது
சமைப்பது பெருக்குவது
துவைப்பது துலக்குவது
எல்லாம் நானே நானே..
பாராட்டத்தான் யாருமே இல்லை..

எப்போவாவது புகைப்பதும்
ஏதோ கொஞ்சம் குடிப்பதும்
நடந்து கொண்டுதான் இருக்கிறது
இல்லையென்றால் அவமரியாதையாகிவிடும்
அப்பாவுக்கு மட்டும் தெரிந்தால்..
என் மரியாதை மாறிவிடும்.. 

வார விடுமுறைகளில் 
நான் நாட்டியம் ஆடுவதை 
புகைப்படம் எடுத்து 
பேஸ்புக்கில்  போட்டால் 
ஒருவன் கூட கமெண்ட் போடவில்லை
பொறாமை பிடித்தவர்கள்
புகையட்டும் உள்ளுக்குள் 

தனிமையின் கொடுமைகளில் 
இட்லி தோசைகளில் இன்பமிருப்பதாய் நானும்
இந்தியன் வங்கியின் இருப்புகளில் இருப்பதாய் 
அப்பாவும், என் நண்பர்களும்
பட்டிமன்றங்கள் பல நடத்தினாலும்
பெரும்பான்மை அவர்களுக்குத்தான் 

என்றாவது வரும் பருப்புபொடியின் பின்
அதைவிட கனமான பொருட்களை  
அனுப்பசொல்லி விண்ணப்ப கடிதங்கள் 
எத்தனை அனுப்பினாலும் 
சலிப்பதேயில்லை அவர்களுக்கும்
அதைச்சுமந்து செல்லும் விமானங்களுக்கும் 

ஓயாமல் உழைக்கும் ஒரு மணித்துளியில்
அம்மாவின் நினைவு வந்துவிட்டது..
நான் அழைத்த வேளையில் 
அவள் 'தங்கம்' பார்த்துக்கொண்டிருப்பதாகவும்
'தென்றல்' இன்னும் முடியவில்லை என்றும் 
அரைமணி கழித்து அழைக்கச்சொல்லி 
துண்டிக்கிறாள் தொடர்பை..

எத்தனை நாட்கள்  இப்படியே போவது!
தாய்மண் அழைக்கிறது..
இஷ்டப்பட்டும் கஷ்டப்பட்டும் 
வாங்கிப்போன பரிசுகளை 
நண்பர்களுக்களிக்கும் வேளையில்
எவனோ ஒருவன் கேட்கிறான் 
'ஏன்டா! எல்லாரும் நானும் ஒண்ணா?'
'இப்படி வாங்கிட்டு வந்திருக்க எனக்கு..' 
ஒருவேளை சட்டையளவு சிறியதாகி விட்டதா?

எழுத்துக்களையும் ஏக்கங்களையும் 
எனக்கு வெளிப்படுத்த தெரியவில்லை
என்றாலும் படிக்கிறேன் 
ஏதாவது வலைப்பதிவுகளை.. 
எப்பொழுதாவது நேர்கிறது..
என் மனம்போன்ற ஒன்றை படிப்பதற்கு
'என்னை போல் ஒருவன்!' 

கடற்கரை மணலில்
சூரிய குளியலுக்காய் 
அரைக்கால் சட்டையுடன்  
அண்ணாந்து படுத்தபடி
வெறித்திருக்கும் நிமிடங்களில் 
தொலைதூர புள்ளியாய்
வெளிச்சம் காட்டிச்செல்லும் விமானம்

தேடல்களை தொலைத்துவிட்டேன்
தேவைகளையும் குறைத்துவிட்டேன் 
பயணங்களில் ஆசையில்லை இப்பொழுது 
பழகிப்போன தேசமாகிவிட்டது இதுவே..
யாரும் வந்துவிடாதீர்கள் 
இன்பமிருப்பதாய் இங்கே..!!!

08 April 2011

தேவதைகளா.. இல்லை அடிமைகளா?!





கண்விழிக்கும் போதே
காற்று போலாகி
என்னை தொலைக்கிறேன்
உருவமில்லா ஒன்றாய்..  
 
குப்பைகளை கூட்டுவதும்
மீண்டும் குவியும் அவைகளுக்காய்
கவலைப்படுவதுமாய்
மரத்து போகும் உணர்ச்சிகள்
 
என்னை சுட்ட பாத்திரங்கள்
சுடாத பாத்திரங்கள்
வரிசைப்படுத்தி பார்க்கிறேன்
எல்லாம் ஒன்றுபோலவே இருக்கின்றன..
 
என்ன உணவு இன்று?
எண்ணெயில் பொறித்ததா?
இல்லை.. அழுத்தத்தில் வெந்ததா?
எப்படி சமைத்தால் பிடிக்கும் என்னை?
 
கறைகளை வெளுத்தே
நகங்களை தொலைக்கிறேன்..
காந்திக்கு சொல்லவேண்டும்..
என் ஆயுதப்படை அவமானப்படுவதை..
 
வரவுசெலவில் மிச்சப்படும்
நாணயங்கள் புலம்புகின்றன
ஒளித்துவைக்க வேண்டாம் 
அவற்றின் உணர்சிகளை என்று  
 
தொலைக்காட்சி விளம்பரங்கள் கூட
என்னுடைய கடமைகளை உணர்த்திக்கொண்டே..
'சமர்த்துப்பொண்ணுடி  நீ!'
இது பக்கத்துவீட்டு மாமி..
 
செவ்வாய் வெள்ளி கணவனுக்காகவும்
வியாழன் பிள்ளைகள் படிப்புக்காகவும்
சனிக்கிழமை எண்ணெய் குளியலுக்கும்
ஞாயிறு மாவரைக்கவும், திங்கள் இட்லி சுடவும்.. 
 
எல்லாநாட்களும் அவர்களுக்காக என்றாலும்
அந்த மூன்று நாட்கள் 
எனக்கே எனக்காய்..
தொடரும் அவஸ்தைகள்..  
 
அவர்களுடைய தேடல்கள் எல்லாம்
புத்தகங்கள், அலுவலக கோப்புகள்,
சோப்பு, சீப்பு, கைக்குட்டை, சில்லறைகள்
அவ்வளவு தான்.. முடிந்துவிட்டது
 
அயராத கடமைகள் தொடர்ந்தாலும்
அடிமையாய் பலநேரம் உணர்ந்தாலும்
கனவுலகில் மட்டும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்
ஒரு தேவதையாய்..!!!

07 April 2011

கடமைக்கு பயந்தவன் நான் இல்லை..!!!



சண்டைப்போட்டு கொண்டிருக்கிறேன்
அமைதியாய் இருக்கிறாள் அவள்
பயமாய் இருக்கிறது எனக்கு
ம்ம்..

மீண்டும்..
குரலை உயர்த்துகிறேன்
முகம் திருப்பி நிற்கிறாள்
அவள்முன் போய் நிற்கிறேன்


அதுதானே பார்த்தேன்..
மூக்கை உறிஞ்சிக்கொண்டு
கண்களை கசக்கியபடி..
அடடா! ஆரம்பித்துவிட்டாளா?!

அடுத்தது என்ன?
'இருந்தாலும் நீ..'
அப்படியே நிற்கிறது என்வார்த்தைகள்..
அதுதான் முறைக்கிறாளே..

அழுகையுடன் முறைப்பவளை
அணைத்து தேற்றுவது
என் கடமை இல்லையா?!
மீண்டும் வார்த்தை தேற்றுதல்கள்

சரிவராது போல இருக்கிறதே..
பெருமூச்சுடன் யோசிக்கறேன்..
என்ன செய்வது?
ஆஹா! வந்துடுச்சு..

'வெளியில போய்ட்டு வரலாமா?'
மாட்டேன் என்ற தலையாட்டல்
அய்யோ!
'அன்னிக்கு நீ கேட்ட இல்ல..'

லேசாய் புருவம் உயர்த்துகிறாள்
'அதுதான், அந்த துணிகடைம்மா..'
அப்பாடா! மெல்லிய சிரிப்பு அவளிடம்
இதோ கிளம்பியாயிற்று..

ச்ச..! என்ன வாழ்க்கையடா இது!
சண்டையும் நானே போட்டு
சமாதானமும் நானே செய்து..
ஊர்சுற்ற வேறு அழைத்து போய்..

இதெல்லாம் இருக்கட்டும்..
இரவு கால்பிடிக்க வேறு சொல்வாளே..
பரவாயில்லை!
கடமைக்கு பயந்தவன் நான் இல்லை..!!!  

05 April 2011

யாருக்கான வேண்டுதல் இது?




அவளையே பின்தொடர்வதாய்
குற்றம் சாட்டுகிறாள்
வார்த்தைகளால் சாகடிக்கிறாள்
கோவில் மணிக்கு போட்டியாய்
கணீரென்று கத்துகிறாள்  
மறுதலிக்கவோ..
என்னை நிரூபிக்கவோ
ஒரு நொடி கூட தராமல்..
 
'ஒரு நிமிஷம்'
என் வார்த்தைகள் எல்லாம்
ஒலிக்காமலே அடங்க..
ஆண்மையின் ஆதிக்கத்தில்
இரவை நனைக்கும் நிலவின் சாட்சியாய்  
வளைகள் ஒலிக்கும் கையைப்பிடித்து
'உன்னை நேசிக்கிறேன்'
அப்பாடா! உரைத்து விட்டேன்
 
நிசப்தமாகின நிமிடங்கள்..
கண்களில் கண்ணீருடன்
உதடுகளை கடித்தபடி..
உடைந்த வளையல்களை வெறித்துவிட்டு 
ஒரு வார்த்தையும் பேசாமல்
வெளியேறிவிட்டாள் கோவிலைவிட்டு
இனி என்ன இருக்கிறது?
ஆறாத்துயருடன்..
என் அடுத்தநாளும் விடிய
 
கோபுரங்கள் என்னை குத்திக்கிழிக்க
சிலைகள் கேலி செய்ய
மணியோ மௌனமாய் நிற்க  
கண்டும் காணாமல் 
கடவுள் முன் நின்றபடி  
ரகசியமாய் முணுமுணுக்கிறாள்
'எப்போது வளையல் வாங்கிதர போகிறாய்?!'
யாருக்கான வேண்டுதல் இது?
 
நான் வேண்டுமென்றா?
இல்லை.. வளையல்கள் வேண்டுமென்றா?!

எப்போது வரப்போகிறாய்?



இன்று..
வறண்ட வானிலையே நிலவுகிறது
உன்னையும் காணவில்லை
அன்பே!
ஒருவேளை...
நீ வரலாம் 
உன்னுடன் மழையும் வரலாம்
வானவில்லும் வரலாம்
என்  கவிதையும் வரலாம்
எப்போது வரப்போகிறாய்?
உன்னால் என் காதலும்
மழையால் உலகமும்
வசந்தங்களை உணர .. 

01 April 2011

தொப்பை :)





திமிர் பிடித்தவன்
திடீரென அழவைப்பான்

பலமணி நேரம் பேசுவான் 
அதே நேரம்
பேசாமலிருந்து பைத்தியமாக்குவான்

சில வரிகளில் திட்டிவிட்டு
பலவரிகளில் 'சரி சரி' என்று
சமாதானம் செய்வான் 

மெளனமாக இருந்துகொண்டே
மூக்கு நுனியில் கோவம் காட்டுவான்
ஆயிரம் கேள்விகளிருந்தாலும் 
'ஒன்றுமில்லை' என்றுரைப்பான் 

'பேசாமடந்தை' போல் இருந்தபடி 
பெரியதாய் ஆராய்ச்சி செய்வான்
கண்டுபிடித்ததை எல்லாம்
ஒருபோதும் சொல்லவே மாட்டான் 

சிரிக்கவே காசுகேட்பான் 
உம்மணாமூஞ்சி..
சின்னதாய் சிரித்துவிட்டால் 
உடனே காதல் கேட்பான்  

காதலிப்பதாய் சொல்லி சொல்லி 
கண்கள் விரிய செய்வான் 
முத்தம் கொடுத்தே 
கைபேசியை கதறவைப்பான்

எப்படியுமே புரியவில்லை 
அவனை..
கண்ணாமூச்சி ஆடுகிறான் 
காதல் என்ற பெயரில் 

கோவம் கொண்ட ஒருவேளையில் 
கத்தியே விட்டேன் 
'போடா தொப்பை' என்று

கேள்விப்பட்டேன் 
ஓடிக்கொண்டு இருக்கிறானாம் 
அதிகாலைகளில் 
அறுபது மைல் வேகத்தில்

அப்பாடா!
இனி சந்திக்கமாட்டான் 
தொப்பை குறையும் வரை 
என்னை..



Related Posts Plugin for WordPress, Blogger...