நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

09 November 2012

"வலியும்..தீபாவளியும்.."


எல்லா ஆண்களும்
ஏன்  அப்பாவிகளாகவே இருக்கிறார்கள்?
பண்டிகை காலத்தில் 
கூடுதல் அப்பாவிகள் 
இதோ கிளம்பியாயிற்று 
பண்டிகைகால கொண்டாட்டங்கள்
முடிவெடுப்பது அவள்
என் முடியை கொடுத்தாவது 
மன்னித்துக்கொள்ளுங்கள் 
என் தலையை கொடுத்தாவது  
அதை முடித்துத்தருவது நான்

ஒன்றாம் வகுப்பு பாடத்தில் வருமே..
ஒரு தோசை பாடல்
அப்பாவுக்கு நாலு என்று..
அது ரொம்பவே சரி 
எனக்கு ஒரு நாலு முழம் வேட்டி 
அம்மாவுக்கு மூணு 
ரொம்பவே சரி 
பட்டுபுடவை, காட்டன் புடவை, சுடிதார்
மீதி உங்கள் கற்பனைக்கு..

மெல்லிய குரலில் கேட்டேன் 
என்ன இனிப்பு செய்ய போகிறாய்?
'குலோப்ஜாமூன்'
மீண்டும் ஏதோ சொல்கிறாள்..
என்னம்மா என்கிறேன் 
அதை செய்யவும்
என்  உதவி தேவையாம்..
என்னத்தை சொல்ல?
அந்த இனிப்பை போலவே
நானும் மூழ்கியபடி
அது சர்க்கரை தண்ணீரிலே 
நான் உப்பு கண்ணீரிலே 

அடுத்தது நகைக்கடை..
அய்யய்யோ!
இப்போ எதுக்கும்மா அங்கே..
கேட்க ஆரம்பிக்கும் போதே
'இப்போ வாங்கினால்  
சிறப்பு தள்ளுபடி' என்கிறாள்..
நகை வாங்குவதையே
தள்ளுபடி செய்தால் நலம்..
நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொள்கிறேன்
வேறு என்ன செய்ய..
ஏதோ வாங்கினாள் 
உங்களுக்கு என்னும் போதே..
சொல்லிவிட்டேன்..
'நானெல்லாம் நகை போடாமலே அழகென்று"

அடுத்தது எலெக்ட்ரானிக்ஸ் கடை 
இங்கே தள்ளுபடி இல்லை 
பழையதை மாற்றி புதுசாம் 
பயந்து போய் 
கடைக்கு வெளியிலேயே நின்றபடி
அவளை மட்டும் அனுப்பினேன்..
சற்று நேரத்தில் 
வெறும் கையுடன் வந்தாள் 
மகிழ்ச்சியுடன் கேட்டேன் 
எதுவும் வாங்கவில்லையா என்று 
பின்னாடி டெம்போவில் வருகிறதாம் 

''வேற என்னம்மா..
வீட்டுக்கு போகலாமா?''
''இல்லைங்க..
சாப்பிட்டுட்டு போயிடலாம்
சமைக்க முடியாது.
டயர்டா இருக்கு..''
''அப்பாடா.. முடிந்தது
கிளம்பலாமா?''
அடுத்த கடையை தாண்டும்போது 
''அப்படியே ஒரு பாக்கெட் 
நூடுல்ஸ் வாங்கிடுங்க..''
''ஏம்மா?''
''நாளைக்கு காலைல அதுதான்..'' 
பிரம்மச்சாரியாய் நான் 
சாப்பிட்ட நூடுல்ஸை விட 
இப்போ சாப்பிடுவது அதிகம் 

தீபாவளியும் வந்துவிட்டது..
தொலைக்காட்சியை போட்டால் 
பாட்டு ஓடுகிறது..
"தீபாவளி.. தலதீபாவளி.."
அட போங்கப்பா..
தீபாவளி என்பது
ஆண்கள் பண்டிகையா 
இல்லை 
பெண்கள் பண்டிகையா?
இதுபோன்ற பட்டிமன்ற தலைப்புகள் 
தொலைகாட்சிகளுக்கு கிடைப்பதில்லையா?

07 November 2012

பிரிவின் வலி


பிரிவின் வலி 
உனக்கு புரியவேண்டுமென்றே
ப்ரியம் தொலைத்ததாய் நடிக்கிறேன் 

ப்ரியம் தொலைத்ததின் வலி
எனக்கு புரியவேண்டுமென்றே 
பிரிந்து போவதாய்
நீயும் நடிக்கிறாய்


வலிகள்  குறைய 
வழிகள் ஏதும்
புரியாத நிலையில்
வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்
இலைகள் நனைந்தாலும்
வேர்கள் நனையாத மரங்களாய்

தூரங்கள் தொலைத்த
ஒரு காதல் வேண்டுமென்று
தொலைத்து கொண்டிருக்கிறேன்
என் பாதைகளை..

என் இருப்பிருக்கும்
இறப்பிற்கும் நடுவே
நீளும் பயணங்கள்
உன் சந்திப்புகளை எண்ணியபடி..

எல்லா அழுகைக்கும் நடுவில்
ஒரு சிறு பிள்ளையெனவே 
உன் முகம் பார்க்கிறேன்
அன்னையெனவே எனை அணைத்து
நீ தரும் சிறு முத்தத்துக்காய்..
Related Posts Plugin for WordPress, Blogger...